Saturday, 14 September 2013
தரையில் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது எறும்பு. அந்த நேரத்தில் எறும்பின் அருகே பூரான் வந்தது.

""எறும்பே, எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? நான் எதிரில் வருவதைக் கூட கவனிக்காமல் சென்று கொண்டு இருக்கிறாயே... அப்படி நீ எங்கேதான் செல்கிறாய்?'' என்று கேட்டது பூரான்.

""பூரானே, இப்போது உன்னைக் கவனிக்கும் வேலை எனக்கில்லை. அதோடு எப்போதும் போல என் கடமையைச் செய்ய புறப்பட்டுச் செல்கிறேன்,'' என்றது எறும்பு.

"" எறும்பே, கடமையென்று நீ எதனைக் கூறுகிறாய்?'' என்று கேட்டது பூரான்.

""பூரானே, தினமும் இரை தேடுவதுதான் என்னுடைய கடமை. நான் இப்போது இரை தேடத்தான் சென்று கொண்டிருக்கிறேன்,'' என்றது எறும்பு.

""எறும்பே, நீ இரையை தினமும் தேடி இந்தப் பாதையின் வழியாகத்தான் சென்று கொண்டிருக்கிறாய். நானும் உன்னைப் பல நாட்களாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்படி இரை தேடி நீ என்ன தான் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டது பூரான்.

""பூரானே, மழைக்காலத்திற்குத் தேவைப் படும் உணவினை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசி என் பொன்னான நேரத்தை வீணாக்க, எனக்கு விருப்பமில்லை. நான் இரை தேடச் செல்கிறேன்,'' என்றபடி சென்றது எறும்பு.

எறும்பு அவ்வாறு சென்றதும், அது தனக்கு அவமானத்தையே ஏற்படுத்தி விட்டது என்று பூரான் கருதியது. "எப்படியாவது எறும்பை அவமானப் பட வைக்க வேண்டும்' என்று மனதில் எண்ணியது பூரான்.

மறுநாள் அதே இடத்தில் எறும்பின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது பூரான்.
சிறிது நேரத்தில் அங்கே எறும்பும் வந்தது. ""எறும்பே, வா, வா, உன்னுடைய வருகையைத்தான் நான் ஆவலோடு, எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் நீ உன்னுடைய கடமையைச் செய்யப் புறப்பட்டு விட்டாயா?'' என்று கேட்டது பூரான்.

""ஆமாம் பூரானே, நான் என்றுமே என்னுடைய கடமையைச் செய்யத் தவறியதில்லை. இப்போதும் நான் என்னுடைய கடமையைத்தான் செய்யச் செல்கிறேன்,'' என்றது எறும்பு.

""எறும்பே, நீ கடமை செய்வதால் சிறந்தவனாக முடியாது; என்னைப் போல் வேகமாக உன்னால் ஊர்ந்து வர முடியுமா? அப்படி நீ ஊர்ந்து வந்துவிட்டால் உன்னை நான் உயர்ந்தவன் என்று ஒப்புக் கொள் கிறேன்,'' என்றது பூரான்.

""பூரானே, உன் வேகத்திற்கு என்னால் ஊர்ந்து வர முடியாது என்ற தைரியத்தில் நீ இவ்வாறு பேசுகிறாய். ஆனால், நான் செயல் புரிவதுபோல உன்னால் செயல் புரிய முடியாது. என் திறமையை இப்போதே உன் முன்னால் காட்டுகிறேன். நீயும் அதனைப் போன்று செய்வாயா என்று பார்க்கலாம்,'' என்றது எறும்பு.

""எறும்பே, அப்படி நீ என்ன சாகசத்தை செய்யப் போகிறாய்?'' என்று கேட்டது பூரான்.

எறும்பு, பூரானிடம் பதில் எதுவும் பேசவில்லை. அருகே இருக்கிற தண்ணீர் தொட்டியை நோக்கிச் சென்றது.
சிறு துரும்பு ஒன்றைப் பற்றிக் கொண்டு மெல்ல மெல்ல தண்ணீர் தொட்டியின் மேலே ஏறியது. துரும் போடு சேர்ந்தபடி தண்ணீருக்குள் பொத்தென்று விழுந்தது.
பின்னர் அந்தக் துரும்பினைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.
""பூரானே, நான் சிறு துரும்பை பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல், உன்னால் மிதக்க முடியுமா?'' என்று கேட்டது எறும்பு.
எறும்பின் பின்னாடியே ஊர்ந்து வந்து தொட்டியின் மேல் விளம்பில் எறும்பு செல்ல இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பூரானுக்கு என்ன சொல்வதென்றே புரிய வில்லை. உடனே அது தன்னுடைய தவறினை உணர்ந்தது.

""எறும்பே, என்னை மன்னித்து விடு... நான் தெரியாமல் இந்தத் தவறினை செய்து விட்டேன். நானே உயர்ந்தவன், நானே பலவான் என்று எண்ணி, உன்னை மட்டம் தட்ட நினைத்தேன். இப்போது நானே அதனால் பெரும் அவமானத்தை அடைந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு,'' என்றது பூரான்.

""பூரானே, இந்த உலகில் வல்லவர்க்கு வல்லவர் உண்டு என்பதை இப்போதாவது நீ அறிந்து கொண்டாய் என்று நினைக்கிறேன்,'' என்றது எறும்பு.

பூரானும், ""ஆமாம்!'' என்று ஒப்புக்கொண்டது.


0 comments:

Post a Comment